தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை சீர் செய்வது தொடர்பான திட்டத்தை வகுக்கும்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் சமூக ஆர்வலர் பாத்திமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
அப்போது, ஆலையை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு பிப்ரவரி 13, 14ம் தேதிகளில் விசாரணைக்கு வர உள்ளதாகவும், ஆலை மூடப்பட்டுள்ளதால் மாசு ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற பேரணியின் போது 14 பேர் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மே மாதம் 28ம் தேதி ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

