அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான இரண்டு அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்களின் போது, தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து, முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்.பி.,யுமான சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.
இந்த பேச்சுகள் மூலம் அரசு மற்றும் தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜனவரி 18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி முதல்வரை தாக்கியோ, நேரடியாகவோ பேசவில்லை என்றும், தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததாகவும், தங்கள் போராட்டத்திற்குப் பிறகு 12 மணி நேர வேலை அரசு அறிவிப்பை திரும்பப்பெறும்போது, தங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும் என வாதிட்டார்.
அவதூறு வழக்குத் தொடர்வதற்கான அரசாணையைப் பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விஷயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்வதாக குற்றம்சாட்டினார்.

சென்னை உயர் நீதிமன்றம்
அப்போது நீதிபதி, அரசை விமர்சித்த அதேவேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது என சி.வி.சண்முகம் தரப்பினரிடம் கேள்வி எழுப்பினார். அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசையும் முதல்வரையும் விமர்சிக்கும் வகையில் சி.வி.சண்முகம் பேசிவிட்டு, நேரடி தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது அவதூறு கருத்து இல்லை என கூறுவதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மத்திய அரசைக் கண்டு தமிழக அரசு பயப்படுவதாகவும், கஞ்சா முதலமைச்சர் என விமர்சித்ததற்காக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என பேசியதற்காக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து, விசாரணையை எதிர்கொள்ளவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

