பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த புகாரில் அதே கட்சியை சேர்ந்த 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் வளர்மதி (33). பாஜக 16வது வட்ட மகளிர் அணி பொருளாளர். மேலும் இவர், அம்பத்தூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெள்ளிவாயல்சாவடியை சேர்ந்த பாஜக முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளரான பொன்.பாஸ்கர் என்பவர் வளர்மதியை அனுகியுள்ளார்.
அப்போது சென்னையில் பல இடங்களில் பியூட்டி பார்லர் நடத்துவதற்கு லைசென்ஸ் வாங்கித் தருவதாக கூறி ரூ.25 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கூறியபடி லைசென்ஸ் வாங்கி தராததோடு, வாங்கிய பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

வளர்மதி
பணத்தை திருப்பித் தருமாறு வளர்மதி கேட்டபோது பாஸ்கர் மற்றும் பாஜக நிர்வாகி முத்துராஜ், பாஜக மாவட்ட தலைவர் செந்தில்குமார், பாஜக அரசுப் பிரிவு தொடர்பு மாநிலத்தலைவர் பாஸ்கரன் ஆகியோர் வளர்மதியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வளர்மதி மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை பாஜக தலைமையின் கவனத்துக்கும் வளர்மதி கொண்டு சென்றுள்ளார்.
இதன் எதிரொலியாக, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பதவியில் இருந்து செந்தில்குமாரை பாஜக தலைமை நீக்கியுள்ளது. பின்னர், சில நாட்கள் கழித்து மீண்டும் செந்தில்குமாருக்கு மாவட்ட தலைவர் பதவியே வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் பொன்.பாஸ்கர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து, வளர்மதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளர்மதி கடந்த வாரம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

புகார் நகல்
அந்த புகாரில், ‘எனக்கு கொலை மிரட்டல் விடுத்த பொன்.பாஸ்கர், பாஜக அரசு தொடர்பு தலைவர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், முத்துராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணம் ரூ.25 லட்சத்தை மீட்டு தர வேண்டும்’ என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில் பாஜ நிர்வாகிகள் பொன்.பாஸ்கர், முத்துராஜ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், அரசு தொடர்பு பிரிவு மாநிலத்தலைவர் எம்.பாஸ்கரன் மற்றும் கார்த்திக்ராஜ், சிவபிரகாஷ் உள்பட 6 பேரின் மீது அவதூறாக பேசுதல், மோசடி, கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மணலி புதுநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

