கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக்கொள்கிறேன் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை, மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் பணிகளை எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பது குறித்தும், தேர்தல் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தல் கூட்டணி முடிவானதும் வேட்பாளர்களை இறுதி செய்யலாம். மாவட்ட செயலாளர்கள் தங்களின் மக்களவை தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகள் பட்டியலை தயாரிக்க வேண்டும். தேர்தல் பணிகளை அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு கொண்டாட வேண்டும்” என்றார்.

