ரயில்வேயில் வேலைக்கு நிலம் திட்டம் தொடர்பான பண மோசடி வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவரது மகளும் எம்பி-யுமான மிசா பாரதி ஆகியோரின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை இன்று சேர்த்துள்ளது.

மனைவி, மகளுடன் லாலு பிரசாத் யாதவ்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமானவர் லாலு பிரசாத் யாதவ். இவர் கடந்த 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் வாங்கிக் கொண்டு, ரயில்வே துறையின் குரூப்-டி பிரிவு பணியிடங்களை நிரப்பியதாக லாலு பிரசாத் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை, லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இவர்கள் அனைவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வேலைக்கு நிலம் திட்டம் தொடர்பான பண மோசடி வழக்கு குற்றப் பத்திரிகையில், ராப்ரி தேவி, மிசா பாரதி, மற்றும் இவர்களது குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளி என கூறப்படும் அமித் கத்யால், மேலும் சிலர் மற்றும் சில நிறுவனங்களின் பெயர்களை அமலாக்கத்துறை இன்று சேர்த்துள்ளது.

அமலாக்கத்துறை.
டெல்லியில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஜனவரி 16ம் தேதி விசாரிக்க நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
இந்த வழக்கில் கத்யால் கடந்த ஆண்டு நவம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை இந்த வழக்கை சிபிஐ பதிவு செய்த எப்ஐஆர்-ன் அடிப்படையில் பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் நடத்தி வருகிறது. சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் ஏற்கெனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

