தங்கவயல : தங்கவயல் நகராட்சி 11 வது ரிவிட்டர்ஸ் வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷினி வெற்றிப் பெற்றார். ஆனால், ஓட்டுகள் குறைந்துள்ளன.
தங்கவயல் நகராட்சியில் சுரங்க குடியிருப்பு பகுதிகளை இணைத்து, நகராட்சிக்கு ஆறு தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் நகராட்சியின் 11- வது ரிவிட்டர்ஸ் வார்டில் தொடர்ந்து நான்கு முறை, வெற்றிப் பெற்றவர் காங்கிரசின் ரமேஷ்.
*சுயேச்சை
ஒருமுறை இந்த வார்டு பிற்படுத்தப்பட்டோர் ‘ஏ’ பிரிவு பெண்ணுக்கு என இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. அப்போது ரமேஷ் போட்டியிட வாய்ப்பு இல்லாமல் போனது. அந்த தேர்தலில், சுயேச்சையான ஜாய்ஸ் இன்ப ராணி வென்றார்.
இந்த வார்டில் கவுன்சிலராக இருந்த ரமேஷ், கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் இறந்து போனார். காலியாக இருந்த இடத்திற்கு இம்மாதம் 27 ல் இடைத்தேர்தல் நடந்தது.
இத்தேர்தலில் காங்கிரஸ் தரப்பில், மறைந்த ரமேஷின் மனைவி சுபாஷினி போட்டியிட்டார். மற்ற கட்சிகள் போட்டியிடவில்லை. சுயேச்சைகளாக ரீகன், ராஜேஷ், ஆனந்தராஜ், விஜயகுமார், ஜோதி லட்சுமி போட்டியிட்டனர்.
*ஓட்டு எண்ணிக்கை
இத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை தங்கவயல் மினி விதான் சவுதாவில் நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. ஆரம்பம் முதலே, காங்கிரஸ் வேட்பாளர் முன்னணியில் இருந்தார். காலை 8:55 மணிக்கு தேர்தல் முடிவை தேர்தல் அதிகாரி ரவிகுமார் அறிவித்தார். காங்கிரசின் சுபாஷினி 962 ஓட்டுகள் பெற்று, 380 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது பதவி காலம், 2025 அக்டோபரில் நிறைவு பெறுகிறது.
தேர்தல் முடிவுக்குப் பின், சுபாஷினி அளித்த பேட்டி:
எனது வெற்றிக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தான் முழு காரணம். காங்கிரஸ் வெற்றிப்பெற ஒத்துழைப்பு கொடுத்த கட்சியினருக்கும், ஓட்டளித்த வாக்காளர்களுக்கும் நன்றி. எம்.எல்.ஏ., ரூபகலா ஒத்துழைப்புடனும், கணவரின் ஆசிர்வாதத்திலும் என் பணிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
…பாக்ஸ்…
ஓட்டு குறைந்தது ஏன்?
இந்த வார்டில், 2020 அக்டோபரில் நடந்த தேர்தலில் காங்கிரஸின் ரமேஷ் 1,226 ஓட்டுகள் பெற்றிருந்தார். தற்போது நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி சுபாஷினி 962 ஓட்டுகள் பெற்றுள்ளார். கணவர் வாங்கிய ஓட்டுகளை விட, மனைவி 264 ஓட்டுகள் குறைவாக வாங்கி உள்ளார்.
கடந்த தேர்தலின்போது ரமேஷின் வெற்றிக்காக உடன் இருந்து ஓட்டு சேகரித்தவர் ரீகன். இடைத்தேர்தலில் ரமேஷின் மனைவி சுபாஷினியை எதிர்த்து போட்டியிட்டார். அவர், 582 ஓட்டுகள் பெற்றிருந்தார். இதனாலும் காங்கிரசுக்கு ஓட்டு சரிவு ஏற்பட்டுள்ளது.
11 வது வார்டு இடைத் தேர்தல் முடிவை, தேர்தல் அதிகாரியான மாவட்ட ஜில்லா
பஞ்சாயத்து உதவி செயலர் சிவகுமார் அறிவித்தார். உடன் தாசில்தார் நாகவேணி,
வருவாய் அதிகாரி ஜெயராம். இடம்: மினி விதான் சவுதா, தங்கவயல்.
ஓட்டுகள் விபரம்:
பெயர் – கட்சி – ஓட்டுகள்
மொத்த வாக்காளர்கள்: 3,262
பதிவான ஓட்டுகள்: 2,118
சுபாஷினி – காங்.,: 962
ரீகன் – சுயே.,: 582
ராஜேஷ் – சுயே.,: 273
ஆனந்த ராஜ் – சுயே.,: 182
விஜயகுமார் – சுயே.,: 105
ஜோதிலட்சுமி – சுயே.,: 5
நோட்டா: 9
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

