தேனி: தேனியில் ஜல்லிக்கட்டில் வீரர்களை பந்தாட கரும்போர் களைக்கு மண் குத்துவது, நீச்சல் அளித்து தயார்படுத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த தொழிலாக கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடந்து வருகிறது. மாவட்டத்தில் 86 கிராமங்களில் பாரம்பரியமாக நாட்டு மாடுகள், மலைமாடுகள் அதிகம் வளர்க்கப்படுகிறது.
தேனி அருகே உள்ள சிவலிங்கம்நாயக்கன்பட்டியில் 250 நாட்டு மாடுகள் பட்டி அமைத்து வளர்க்கப்படுகின்றன. இவற்றில் காளையின் மூர்க்கத்தனம், கொம்பு, வயது ஆகியவற்றை கணக்கிட்டு ஜல்லிக்கட்டு போட்டி காளையை தேர்வு செய்கின்றனர். 6 வயதுடைய காளையினை ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்க இளம் வயதிலேயே அதற்கான பயிற்சி அளிக்கின்றனர்.
இந்த காளையின் கம்பீரமான திமில், நீண்ட கழுத்து, சீரான இடைவெளியில் வளர்ந்து கொம்பு பார்ப்பவர்களை மிளர வைக்கும். நாட்டு மாட்டில் கரும்போர், செம்போர் என இருவகை காளைகள் உள்ளன.
செல்லக்கண்ணு, சிவலிங்கநாயக்கன்பட்டி: மேய்ச்சல் சென்று பட்டிக்கு திரும்பும் நாட்டு மாடுகளுடன் வளரும் காளைகள் 6 வயது ஆவதற்கு முன்பே ஜல்லிக்கட்டுக்காக தேர்வு செய்வோம். ஆனால், போட்டிக்கு 6 வயது ஆகி, 8 பற்கள் முளைத்த பிறகுதான் தயார்படுத்தி அனுப்புவோம். போட்டிக்கு ஒரு மாதத்திற்கு முன் தினமும் நீச்சல், மண் குத்துதல் நடை பயிற்சிகளுடன்,முறைான உணவு வழங்கி பராமரிக்கிறோம். பராமரிப்பில் நன்கு அறிமுகமான ஒரிருவரை மட்டுமே அனுமதிக்கும் மற்றவர்கள் நெருங்க முடியாது.
பரிசுகளை குவிக்கும் காளை
பூபதிராஜா, சிவலிங்கநாயக்கன்பட்டி: ஜல்லிக்கட்டு காளை போட்டிக்கு செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தினமும் ஒரு லிட்டர் பசும் பால், 200 கிராம் வெந்தயம், ஒரு தேங்காய் பருப்பு ஆகியவற்றை மொத்தமாக அரைத்து காளைகளுக்கு வெந்தயப்பால் தருவோம்.
இதனால் காளை ஜல்லிக்கட்டில் அதிக நேரம் நின்று விளையாடும். புண்ணாக்கு சேர்க்காமல் ஊறவைத்த பருத்திக்கொட்டை மட்டும் வழங்குவதால் காளை வயிறு இறங்காமல் உடல் முருக்காகவும், மிடுக்காகவும் இருக்கும்.
இதனால் ஜல்லிக்கட்டில் ‘கரும்போர்’, ‘செம்போர்’ நாட்டு காளைகளுக்கு தனி மவுசு உண்டு. தினமும் அரை கிலோ நாட்டு சுண்டல் 10 மணி நேரம் ஊறவைத்து அப்படியே காளைக்கு வழங்குவோம்.
இதனை காளை அசைபோட்டு சாப்பிடும் போது கழுத்து பகுதி அடர்த்தி அதிகரித்து, திடமான திமில் உருவாகும். நாட்டுமாட்டு காளைகள் திமில், கழுத்து நீண்டு அகலமாக வளர்கின்றன.
இதனால் ஜல்லிக்கட்டில் சிலிர்த்து எழும் காளைகள் திமில், கழுத்தை மாடுபிடி வீரர்களை அருகில் நெருங்க விடாது. மீறி நெருங்கினால் வீரர்களை துாக்கி வீசி பந்தாடுகிறது. அக்காட்சிகளை பார்க்கும் போது எங்களுக்குள் பெருமிதம் ஏற்படும்.
நாங்கள் வளர்க்கும் கரும்போர் காளை மதுரை, திண்டுக்கல், தேனி அய்யம்பட்டி ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்றுள்ளது.
இதில் இதுவரை யாரும் காளையை பிடிக்கவில்லை. இக் காளையை பார்த்தாலே வீரர்கள் ஒதுங்கி கொள்வார்கள். அந்தளவிற்கு மிரட்டும். ஜல்லிக்கட்டில் வீரர்களை பந்தாடி தங்க காசு, பீரோ, பேன், அண்டா போன்ற பல பரிசுகளை குவித்துள்ளது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

