வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியின் சார்பில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே முன்மொழியப்பட்ட நிலையில் இவர்கள் ராகுலை முன்னிறுத்தியுள்ளனர்.
கர்நாடக மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று காங்கிரஸ் நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கர்நாடக மாநில முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, “ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வர வேண்டும். பாரத் ஜோடோ யாத்திரையை நாட்டில் யாரும் செய்ததில்லை. தற்போது மீண்டும் பாரத் ஜோடோ துவங்க உள்ளது. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ‘நியாய யாத்திரை’ துவங்கப்படும். எனவே ராகுலுக்கு அதிகாரம் அளிக்க அனைவரும் முயற்சிப்போம்.
அதற்காக அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். ராகுலை பிரதமராக்க முயற்சி செய்யுங்கள். நாம் அனைவரும் இந்துக்கள். நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதுதான் காங்கிரசின் சித்தாந்தம். நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய கட்சி காங்கிரஸ், அதிகாரத்துக்காக அல்ல.

ஜனசங்கம் 1950ல் நிறுவப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டதாக ஏதேனும் உதாரணம் உண்டா. இவர்கள், சுதந்திரத்துக்காக காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கின்றனர். ஒரு அணையையாவது பா.ஜ.க கட்டி உள்ளதா?. ஆனால் 75 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது என்கின்றனர்.
நாட்டில், வெவ்வேறு ஜாதிகள், மொழிகள், கலாசாரங்களை சேர்ந்த 143 கோடி மக்கள் உள்ளனர். நாடு முழுதும் வளர்ச்சி அடைய வேண்டுமானால், அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் பா.ஜ.,வுக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.

