மேற்கு வங்கத்தில் கல்லூரி மாணவிக்கு லெட்டர் பேடில் வந்த காதல் கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க கல்லூரி
மேற்கு வங்கத்தின் கிழக்கு பர்வானில் உள்ள குஸ்கார் நகரில் அரசு கலைக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு கல்லூரி லெட்டர் பேடில், கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் காதல் கடிதம் ஒன்று வந்தது.
கடந்த 25ம் தேதியிட்ட அந்த கடிதத்தில், அந்த மாணவியின் பெயர் குறிப்பிட்டு, ”உன் மீது நம் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர் காதல் வயப்பட்டுள்ளார். ஆனால், நீயோ எந்த பதிலும் அளிக்கவில்லை. அவரால் தனது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். அதனால், தயை கூர்ந்து, அவருக்கு உதவ வேண்டும். அதன் மூலம் நமது கல்லூரி மாணவர் எதிர்காலத்தில் இது போன்ற நிலைக்கு தள்ளப்படாமல் இருப்பார்” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதம் கல்லூரி முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இணையத்திலும் வேகமாகப் பரவியது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் சுதிப் சத்தோ உபாத்யாய், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கடிதம் அனுப்பிய முன்னாள் மாணவரை போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். அதில், அந்த மாணவர் பழைய லெட்டர் பேட் ஒன்றினை நகல் எடுத்து, மோசடியாக முதல்வரின் கையெழுத்தை இட்டு, கடிதம் அனுப்பியது அம்பலமானது.

கல்லூரி லெட்டர் பேடில் காதல் கடிதம்
இதுகுறித்து, விளக்கமளித்துள்ள கல்லூரி முதல்வர் சுதிப் சத்தோ உபாத்யாய், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு முன்னாள் மாணவர் இருப்பது தெரியவந்ததாகக் கூறினார். மேலும், அவர்கள் மூவரும் இதுதொடர்பாக மன்னிப்பும் கேட்டதாக கூறினார். அவர்களிடம் இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.
2 மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவரின் எதிர்காலத்தை கருதி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என கல்லூரி முதல்வர் சுதிப் சத்தோ உபாத்யாய் தெரிவித்துள்ளார். மோசடியாக கல்லூரி லெட்டர் பேடில் காதல் கடிதம் அனுப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களை அவர்களின் எதிர்காலம் கருதி மன்னித்து விடுவித்தது சரியானது அந்த மாணவர்களுக்கு குற்றத்தை பற்றி தெரியவில்லை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்களின் எதிர்காலமே மிகவும் பாதிக்கப்படும்