தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற நிர்மலா சீதாராமனிடம் வெள்ள நிவாரணம், சீரமைப்புக்கு தேவையான நிதியை வழங்குமாறு 72 பக்க மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
தூத்துக்குடி, கோரம்பள்ளம் பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். கோரம்பள்ளம் குளக்கரையில் 150 மீட்டர் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். ஆய்வின்போது தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன்பின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற நிர்மலா சீதாராமனிடம் வெள்ள நிவாரணம், சீரமைப்புக்கு தேவையான நிதியை வழங்குமாறு 72 பக்க மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்ட்ர பக்கத்தில், “தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிவாரணப் பணிகள் குறித்தும் துாத்துக்குடியில் இன்று (26-12-2023), ஒன்றிய இணை அமைச்சர் திரு.எல்.முருகன் அவர்கள் மற்றும் துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் முன்னிலையில், அரசு அதிகாரிகளுடன் மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புக்கு தேவையான நிதி வழங்கிடக் கோரி 72 பக்கங்கள் கொண்ட விரிவான குறிப்பாணை ஒன்றினை ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களிடம் வழங்கினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

