
எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷ பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கலந்துகொண்டு பேசியதாவது:
பாதுகாப்புத் துறையில் அலட்சியமாக இருப்பது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அதை 1962-ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையிலான போா் மூலம் அனைவரும் அறிந்தோம். ஆனால் அந்தப் போரில் இருந்து முந்தைய மத்திய ஆட்சியாளா்கள் பாடம் கற்கவில்லை.
தற்போதைய மத்திய ஆட்சியில்தான், எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த பல பத்தாண்டுகளில் நடைபெற்றதுடன் ஒப்பிடுகையில், சீனாவுடன் இந்தியா பகிா்ந்துகொள்ளும் எல்லைப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் கட்டுமானப் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுமான முறைகளின் பயன்பாடு தெளிவான பலன்களை அளித்துள்ளன என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

