
உத்தர பிரதேசத்தில் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் மது விற்பனைக்கு மாநில பாஜக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிா்க்கட்சியான சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுற்றுலாவுக்கான சொகுசு படகுகள் ஆகியவற்றில் மது விற்பனை செய்ய அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேசத்தை 1 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாக மாற்ற பாஜக அரசு ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது. ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், சொகுசுப் படகுகளில் மதுபானம் விற்பனையை அனுமதிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மாநிலத்துக்கு வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் வருவதாகக் கூறுவது பொய். வருமானம் ஈட்டுவதற்காக மது விற்பனையை பரவலாக்க அரசு முடிவு செய்துள்ளது. இது நெறிகளுக்கு மாறான செயல். இன்று மதுபானத்தை பரவலாக்கினால், அடுத்ததாக தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையும் அதிகரிக்கும்.
மது விற்பனையை நல்லது என்று நினைத்தால் பாஜக அலுவலகத்தில் வைத்து அதனை நடத்தலாம். பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மது விற்பனை செய்வது குற்றச் செயல்களை அதிகரிக்கும், பொது அமைதியைக் குலைக்கும். மதுப் பழக்கத்தால் குற்றச்செயல்கள் அதிகரிப்பது ஏற்கெனவே பல்வேறு புள்ளி விவரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களை மதுவுக்கு அடிமையாக்கி பணம் ஈட்ட முயலும் பாஜக அரசை அகற்ற வேண்டும் என்றாா்.

