சென்னை: ” தமிழகத்தில் கொரோனா தொடர்பான பதற்றமான சூழல் இல்லை ” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்பாக கண்காணித்து வருகிறோம். 98 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டதால் எதிர்ப்பு சக்தி கூடுதலாக உள்ளது. காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் மட்டும் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது. உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் 3, 4 நாட்களில் குணமாகி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ஒரு இலக்க எண்களில் உள்ளது. கடந்த 7 வாரங்களில் இதுவரை 16,516 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. அனைத்து முகாம்களில் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மருத்துவ முகாம்கள் மூலம் 7.83 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
சிங்கப்பூரில் பலர் உறுமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் பணியாற்றும் டாக்டர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் கொரோனா பாதித்த நபர்கள் 3 நாட்களில் குணமடைந்து விடுகிறார்கள். இருமல், சளி ஆகிய உபாதைகள் மட்டுமே ஏற்படுகிறது என சொன்னார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

