சென்னை: சென்னையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பெரு வெள்ளத்தின்போது தண்ணீரை புல்டோசர் மூலமாக அகற்றுவதாக வீடியோ ஒன்று பகிரப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மை தன்மை என்னவென்று அலசுவோம்.
சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த பெரு மழையின் காரணமாக மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகள், கடைகள் என எல்லா பகுதிகளுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டனர். சமூக வலைதளங்களில் சென்னை வெள்ளம் தொடர்பாக பல்வேறு காட்சிகள் பரவி காண்போரை கலங்க வைத்து வருகின்றன.

அதே சமயம் இதுதான் வாய்ப்பு என்று அரசியல் உள்நோக்கத்தாலோ அல்லது சமூக வலைதளத்தில் அதிகளவிலான வரவேற்பை பெறுவதற்காக பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரை புல்டோசரில் அள்ளி அப்படியே சாலையோரம் கொட்டும் வீடியோ அது. பாஜக ஆதரவாளரான சவுதா மணி எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

“விடியா ஆட்சியின் மூளை எப்படி வேலை செய்கிறது பாருங்கள். முட்டாள் ஜென்மங்கள் ஆட்சியில் இருந்தால் எல்லாம் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்.” என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதேபோல், அதேபோல் அதிமுகவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரும் இந்த வீடியோவை பகிர்ந்து “இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அறிவார்ந்த கூட்டத்தை யாராவது பார்த்து இருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதேபோல் ஏராளமான பாஜக, அதிமுக ஆதரவாளர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை ஏராளமானோர் இந்த வீடியோ பகிர்ந்து அரசை விமர்சித்து வருகிறார்கள். இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து அறியும் முயற்சியில் ஈடுபட்டோம். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் ஈடுபட்டோம். அப்போதுதான் இந்த வீடியோ பல மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பகிரப்பட்டு வரும் ஒன்று என்பது தெரியவந்தது.
2018 டிசம்பர் மாதம் finofilipino என்ற இணையதளத்தில் இது பகிரப்பட்டு உள்ளது. அதேபோல் குஷல் பாகிஸ்தான் என்ற பக்கத்தில் 2022 ஆம் ஆண்டு இதே வீடியோ பகிரப்பட்டு உள்ளது. இதன் மூலம் பழைய வீடியோவை பகிர்ந்து சென்னையில் நடைபெற்றதாக வதந்தி பரப்பி இருப்பது உறுதியாகிறது.

