புதுடில்லி: இண்டியா கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் டில்லியில் வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ., ஆட்சியை எதிர்ப்பதற்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முயற்சியால் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணிக்கு “இண்டியா” கூட்டணி என பெயரிட்டன. இது வரையில் மூன்று முறை கூட்டங்கள் நடைபெற்று முடிந்து உள்ளது.
கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்.,தலைவர் ராகுல் பிரதமர் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனிடையே கடந்த நவம்பர் மாதத்தில் 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கவனம் செலுத்திய காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்., தோல்வி அடைந்தது.
இதனையடுத்து அடுத்த கூட்டம் நடைபெறுமா என எதிர்பார்த்த நிலையில் சமாஜ்வாதிகட்சியின் அகிலேஷ், திரிணமுல் கட்சியின் மம்தா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கினர்.
இந்நிலையில் காங்.,வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் வரும் 19ம் தேதி மாலை 3 மணிக்கு இண்டியா கூட்டணியின் 4 வது ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது என காங்.,கட்சியின் ஜெய்ராம்ரமேஷ் எகஸ் வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

