இன்று முன்னாள் அமைச்சர் C.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…
“மிக்ஜம் புயலால் சென்னையில் கொட்டித் தீர்த்த தொடர்மழை ஓய்ந்து ஒருவார காலம் ஆகிறது. பெரு வெள்ளத்துக்குப் பிறகு நோய்த்தொற்று எளிதில் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது;
அவற்றை போர்க்கால அடிப்படையில் தடுத்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். மிகக்குறிப்பாக, சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் இயல்புநிலை இன்னும் திரும்பாமல், வெள்ள நீரும், கழிவு நீரும் கலந்திருப்பதன் விளைவாக நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
மண்டல வாரியாக மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதிக்காதவாறு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதேபோல், சென்னை திருவொற்றியூர், எர்ணாவூர், மணலி தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்திருக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக, வடசென்னை பகுதிகளில் நோய் தடுப்பு நடடிக்கைகளை முடுக்கிவிட்டு, அப்பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களுக்கும், இப்போதுவரை உணவின்றி, உறக்கமின்றி தவிக்கும் மக்களுக்கும் உரிய மருத்துவ உதவிகள் கிடைத்திட ‘சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட்டு’ உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மிகக்குறிப்பாக, மாநகரின் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் எவ்வித தற்காப்பு உபகரணங்கள் இன்றி கழிவுகளை அகற்றுவது ஆபத்தை விளைவிக்கும். அவர்களின் நலனை கருத்தில்கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்குவதோடு, சுழற்சி அடிப்படையில் அவர்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாமினை நடத்திட வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.




