சுல்தான்பூர்: உத்தர பிரதேசத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த நபர், சிகரெட்டால் முகத்தில் சூடுவைத்ததுடன், கோடரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யின் சுல்தான்பூரில் கடந்த 3ம் தேதி பெண் ஒருவரின் சடலம் தீயால் சுட்ட காயங்கள் மற்றும் காதில் ரத்தம் வடிந்தநிலையில் கிடந்தது. சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சுராஜ் குமார் சோங்கர் என்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கூறியதாவது: சுராஜ் குமார் சோங்கருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அந்த பெண் பணம் பெற்றுள்ளார். ஆனால் உறுதியளித்தபடி வேலை தராததால் பணத்தை திருப்பி தருமாறு சோங்கர் கேட்டுள்ளார். அவர் பணத்தை தராமல் இழுத்தடித்ததால், சோங்கர் ஆத்திரமடைந்தார்.
இந்த நிலையில் கடந்த 3ம் தேதி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்து முகத்தில் சிகரெட் தீயால் சுட்டுள்ளார். கோபம் தணியாததால் கோடரியால் அந்த பெண்ணை வெட்டி கொலை செய்து, சாலையோரத்தில் சடலத்தை வீசி சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

