நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த மார்ச் மாதம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமீபகாலமாகவே திடீர் திடீரென மக்களைச் சந்தித்துவருகிறார். கர்நாடகத் தேர்தலின்போதுகூட, மக்களோடு மக்களாக அரசுப்பேருந்தில் பயணித்தல், ஸ்விக்கி ஊழியர்களை நேரில் சந்தித்துப் பேசுதல், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென டெல்லி பல்கலைக்கழகத்தில் நுழைந்து மாணவர்களுடன் உரையாடுதல் போன்ற செயல்களைச் செய்துவந்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு டெல்லியிலிருந்து, சண்டிகருக்குச் சென்றுகொண்டிருந்த ராகுல் காந்தி, திடீரென ஹரியானாவின் அம்பாலாவில் லாரி ஓட்டுநருடன் பேசிக்கொண்டே லாரியில் பயணம் செய்திருக்கிறார். லாரியில் ராகுல் காந்தி பயணம் செய்வதை காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்திருக்கிறது.

