சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வட சென்னை பகுதிகளில் இன்னும் வடியாமல் இருக்கிறது. இந்நிலையில் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் கலந்திருக்கிறது. இது தொடர்பாக பசுமைத்தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
வழக்கமாக சாதாரண பருவமழைக்கே சென்னை ஒரு மாதிரி கசகச என்றுதான் இருக்கும். இந்நிலையில், கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வேளச்சேரி போன்ற புறநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை.
மறுபுறம் சென்னையின் நகர் பகுதிகளான, வட சென்னை பகுதியில் மக்கள் மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வடசென்னையின் பட்டாளம், அம்மையம்மன், திருவொற்றியூரின் சில பகுதிகள், மணிலியின் ராஜீவ்காந்தி நகர் என பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. இதில் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் உள்ள சிபிசிஎல் எனப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து சமீபத்தில் கச்சா எண்ணெய் வெளியிருக்கிறது. இது பக்கிங்காம் கால்வாயில் கலந்து, கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலில் கலந்திருக்கிறது. இதனால் இந்த பகுதியில் மீன் வளம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

