ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், இன்று (டிச.,8) அதிகாலை தனது பண்ணை வீட்டில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2014ல் தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் 2 முறை முதல்வராக பதவி வகித்தார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து நேற்று (டிச.,7) காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.
இந்த நிலையில், சந்திரசேகர ராவ், ஏரவல்லியில் உள்ள தனது பண்ணை வீட்டில் இன்று அதிகாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமுற்றதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 69 வயதான சந்திரசேகர ராவ் கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிந்துள்ளதாக தெரிகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சந்திரசேகர ராவ், விரைவில் குணமடைய வேண்டுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

