விழுப்புரம்: விழுப்புரம் – புதுச்சேரி நான்கு வழிச்சாலையில் ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான முடிவடைந்ததை தொடர்ந்து, திறப்பு விழா காணாத நிலையில், வாகனங்கள் போக்குவரத்து மிகுந்த விழுப்புரம், வளவனுார் நகருக்கு செல்லாமல் பைபாசில் பயணிக்க தொடங்கியுள்ளன.
விழுப்புரம் – நாகை இடையே நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
இதில், முதல் கட்டமாக விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் முதல் புதுச்சேரி அருகே எம்.என்.குப்பம் வரை 29 கி.மீ., திட்டப் பணிகளை முடித்து, மார்ச் மாதத்திற்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், ஜானகிபுரம் முதல் எம்.என்.குப்பம் வரை, சிறுபாலங்கள் மற்றும் சாலை பணிகள் முடிந்த நிலையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வந்தது.
அதில், பிரதானமான ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம், கோலியனுாரில் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம், வளவனுார் பைபாசில் மேம்பாலம் மற்றும் கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வந்தது.
அதில், கோலியனுாரில் மேம்பால பணி ஏற்கனவே முடிந்த நிலையில், தற்போது ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் மற்றும் இணைப்பு பாலம் கட்டுமான பணிகள் முடிந்து, ஒரு பகுதியில் சாலையும் போடப்பட்டுள்ளது.
அதனையொட்டி நேற்று முதல் ஜானகிபுரம் பைபாஸ் சாலையிலிருந்து, புதிய ரயில்வே மேம்பாலம் வழியே வாகன போக்குவரத்து துவங்கியுள்ளது. இதனால், தென்மாவட்டங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த விழுப்புரம், வளவனுார் நகர பகுதிக்குள் செல்லாமல் ஜானகிபுரத்தில் இருந்து கண்டமானடி, கொளத்துார், மேலமேடு, ஆனாங்கூர், சுந்தரிபாளையம், வளவனுார் பைபாஸ், கெங்கராம்பாளையம், மதகடிப்பட்டு, திருபுவனை, கண்டமங்கலம், அரியூர் வழியாக எம்.என்.குப்பத்திற்கு பைபாஸ் சாலையில் நேரடியாகவும், விரைவாகவும் செல்ல துவங்கியுள்ளன.
இருப்பினும், ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலத்தின் மீது பக்கவாட்டு, பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடப்பதால், பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் வளவனுார் பைபாஸ் மேம்பாலம், கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணிகள் முடிக்கப்படாததால், அந்த பகுதிகளில் மட்டும், கீழே உள்ள பழைய சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.


சொல்வதற்கு ஒன்றுமில்லை