ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று(டிச.,7) பதவியேற்றார். அவருக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக பத்தி விக்ரமார்கா பதவியேற்றார்.
தெலுங்கானா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், 64 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. புதிய முதல்வராக மாநில காங்., தலைவர் ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. தெலுங்கானா காங்., தலைவராக ரேவந்த் ரெட்டி, 2021ல் பொறுப்பேற்ற போதே, கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை. ஆனால், காங்., – எம்.பி., ராகுல் மற்றும் பிரியங்காவின் ஆதரவு ரேவந்த் ரெட்டிக்கு இருந்தது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்பி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வராகவும், பத்தி விக்ரமார்கா துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இவர்களுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
11 அமைச்சர்கள் பதவியேற்பு
இவர்களுடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். மல்லு பத்தி விக்ரமார்கா, தாமோதர ராஜ நரசிம்மர், உத்தம் குமார் ரெட்டி, வெங்கட் ரெட்டி, அனுஷ்யா சீதக்கா, பொன்னம் பிரபாகர், டி.ஸ்ரீதர் பாபு, நாகேஸ்வர ராவ், சுரேகா, ஜூபல்லி கிருஷ்ணா ராவ், ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகிய 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

