புதுடில்லி,தன்னை விமர்சித்த காங்கிரசை விளாசும் வகையில், ‘இது அவர்களுடைய, 70 ஆண்டு பழக்கம்; அவ்வளவு சுலபமாக மாறாது’ என, பிரதமர் மோடி குறிப்பிட்டுஉள்ளார்.
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில், பா.ஜ., வென்றது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றது.
இந்நிலையில், தனியார் செய்தி ‘டிவி சேனலில்’ இது தொடர்பான ஒரு நிகழ்ச்சி வெளியிடப்பட்டது.
‘மிக பிரமாண்டமான உருகுதல்’ என்ற பெயரிலான அந்த நிகழ்ச்சியில், ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பா.ஜ., வென்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளதற்கு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மக்களை பிராந்திய அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்துவதாக காங்., மீது அவர் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பான, ‘வீடியோ’வை பதிவிட்டு, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
ஆணவம், பொய், அவநம்பிக்கை, அறியாமை ஆகிய தங்களுடைய குணங்கள் குறித்து சிலர் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், பிரிவினை ஏற்படுத்தும் அவர்களுடைய நோக்கத்தில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது அவர்களுடைய, 70 ஆண்டு பழக்கம். அவ்வளவு சுலபமாக கைவிட முடியாது. இதுதான் அவர்களுடைய அறிவு. இதைவிட மோசமாக உருகுதல்களை அவர்கள் விரைவில் சந்திப்பர்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி இவ்வளவு ஆக்ரோஷமாக பதிவுகளை வெளியிட்டதில்லை. அவருடைய இந்தப் பதிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது.
அதே நேரத்தில், ‘கடந்த சில மாதங்களாக, சமூக வலைதளங்களில், எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கடுமையான பதிவுகளை வெளியிட்டு வருகிறோம். இந்தப் பதிவு, பிரதமரின் வழக்கத்துக்கு மாறானது அல்ல’ என, பா.ஜ., மூத்த தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

