தி.மு.க.,வின் சமீப கால நடவடிக்கைகள், காங்கிரஸ்மேலிடத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. தி.மு.க., – எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியனின் அறிக்கை, வி.பி.சிங்கிற்கு சிலை ஆகிய இரண்டு விவகாரங்களும் தான், காங்., தலைமைக்கு கசப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில், குற்றவாளியான பேரறிவாளனை, ஸ்டாலின் கட்டிப் பிடித்து வரவேற்றது, ஏற்கனவே காங்., தலைவர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில், மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை பாராட்டி, தமிழச்சி தங்க பாண்டியன் பேசியது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்ததாக, வி.பி.சிங் சிலை திறப்பு விழா. ராஜிவ் ஆட்சி கவிழ காரணமானவர், வி.பி. சிங். இவருக்கு சிலை வைத்ததோடு இல்லாமல், இதன் திறப்பு விழாவிற்கு, உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை அழைத்தது, காங்கிரசை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சீனியர், தி.மு.க., தலைவரிடம், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு, ‘காங்கிரசை கண்டபடி திட்டுகிறார் அகிலேஷ் யாதவ்; அவரை வைத்து வி.பி. சிங் திறப்பு விழாவை நடத்தியது சோனியா, ராகுலுக்கு பிடிக்கவில்லை… எதற்கு தமிழச்சி தங்க பாண்டியன் இப்படி பேச வேண்டும்’ என, வருத்தப்பட்டாராம்.

