கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், தேசிய கீதத்தை அவமதித்ததாக, ஆளும் திரிணமுல் காங்., அளித்த புகாரின் அடிப்படையில், எதிர்க்கட்சியான பா.ஜ.,வைச் சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கோல்கட்டாவில், சட்டசபை வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு, நவ., 29ம் தேதி, மத்திய பா.ஜ., அரசின் பாரபட்சமான போக்கை கண்டித்து, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு அருகில், 50 மீட்டர் தொலைவில், திரிணமுல் காங்., அரசுக்கு எதிராக, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது, திரிணமுல் காங்., நிர்வாகிகள் தேசிய கீதத்தை பாடினர். அவர்களை குறுக்கீடு செய்யும் விதமாக, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் அதிக சத்தத்தை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேசிய கீதத்தை அவமதித்ததாக, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் மீது, ஆளும் திரிணமுல் காங்., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், ‘திரிணமுல் காங்., நிர்வாகிகள் தேசிய கீதம் பாடியது எங்களுக்கு கேட்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை சட்ட ரீதியாக சந்திப்போம்’ என்றனர்.

