போங்கீர்: பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியில் உள்ள அனைத்து ‛பெரிய’ தலைவர்களும் பண்ணை வீடுகளில் அமர்ந்து அரசை நடத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.
தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. நாளை (நவ.,28) மாலையுடன் பிரசாரம் ஓயவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. போங்கீர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பேசியதாவது: பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியில் உள்ள அனைத்து ‛பெரிய’ தலைவர்களும் பண்ணை வீடுகளில் அமர்ந்து அரசை நடத்துகிறார்கள். அக்கட்சியினர் பணக்காரர்களாகி வரும்போது ஏழைகள் இன்னும் ஏழைகளாகின்றனர்.
பி.ஆர்.எஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‛பண்ணை இல்லத்தில்’ இருந்து தான் அரசு இயங்கும். அவர்களின் கொள்கைகள் அனைத்தும் பெரிய வணிகர்களுக்கு மட்டுமே. சிறு வணிகர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் ஆகியோருக்கு அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். தெலுங்கானா மக்கள் விற்பனைக்கு அல்ல என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

