ஜெருசலேம்: இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. இதில் 13 இஸ்ரேலியர்களும், 4 தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, அக்., 7 முதல் போர் நடந்து வருகிறது. இதில், இஸ்ரேலில், 1,400 பேரும், காசாவில், 11,000 பேரும் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலில் இருந்து, 240க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். சமீபத்தில், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, நான்கு நாட்களுக்கு போரை நிறுத்தவும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்கவும் இஸ்ரேல் ஒப்புக் கொண்டது. அதற்கு ஈடாக, குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்தது.
முதல் கட்டம்
முதல்கட்டமாக இஸ்ரேலில் இருந்து பிடித்து வைத்திருந்த, தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தைச் சேர்ந்த 12 பிணைக் கைதிகள் உட்பட 25 பேரை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு விடுதலை செய்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் வசம் உள்ள 39 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இரண்டாவது கட்டம்
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. இதில் 13 இஸ்ரேலியர்களும், 4 தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர். அவர்கள் காசா எல்லை வழியாக எகிப்தை அடைந்தனர்.

