தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக் ராஜன், 27; திருமணமாகாத அவர், சென்னையில் டிரைவராக வேலை பார்த்தார். இவர், தீபாவளி பண்டிகைக்காக, 11ம் தேதி ஊருக்கு வந்தார். பாட்டி பத்மினி வீட்டில், தீபாவளி கொண்டாடி விட்டு, 13-ம் தேதி, சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு சென்னை செல்வதாக கூறிச் சென்றார்.
அதன் பின், பாட்டி பத்மினி, அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. சோழபுரம் போலீசில் பாட்டி புகார் அளித்தார். கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே பகுதி, கீழத்தெரு வழியாக சென்ற அசோக்ராஜன் மீண்டும் திரும்பாதது தெரிய வந்தது.
இதற்கிடையில், அசோக் ராஜன் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘எனக்கு ஆண்மை இல்லாததால், வாழப் பிடிக்கவில்லை’ என, எழுதப்பட்டிருந்தது. ஆனால், அது அசோக் ராஜன் கையெழுத்து இல்லை என, தெரிய வந்தது. மேலும், சோழபுரம் கீழத்தெரு சித்த வைத்தியரான கேசவமூர்த்தி, 47, என்பவருடன், அசோக்ராஜன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
போலீசார் கேசவமூர்த்தியை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் அசோக்ராஜனை கொலை செய்து, உடலை வீட்டிற்கு பின்புறம் புதைத்தது தெரியவந்தது.
அவரது வாக்குமூலம்: ஆண்மை இல்லாததால், தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி, அசோக்ராஜன் என்னிடம் அழுதார். தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்திய நான், ஹோமோ செக்ஸ் வைத்துக் கொள்ள அழைத்தேன். அதற்கு அவர் மறுத்த நிலையில், அவருக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்தேன்.
மருந்தை சாப்பிட்ட பின், சிறிது நேரத்தில் அவர் இறந்தார். அதனால், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் பின்புறம் புதைத்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். கேசவமூர்த்தியை கைது செய்த போலீசார், அவரது வீட்டின் பின்புறம் வேறு யாரையாவது இதே போல் கொன்று புதைத்தாரா என, ஆய்வு செய்து வருகின்றனர்.

