
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு கட்சியில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு நிஷிகாந்த் துபே கடிதம் அனுப்பினாா். இந்தப் புகாரை விசாரித்த மக்களவை நெறிமுறைகள் குழு, மஹுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்கப் பரிந்துரைத்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அலுவலகத்திடம் அறிக்கை சமா்ப்பித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் அமைப்புரீதியான 35 மாவட்டங்களுக்கு கட்சித் தலைவா்கள் நியமிக்கப்பட்ட திருத்தப்பட்ட பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் அங்குள்ள கிருஷ்ணாநகா் (நாடியா வடக்கு) மாவட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவராக மஹுவா மொய்த்ரா நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் கிருஷ்ணாநகா் தொகுதியில் போட்டியிட்டு மஹுவா வெற்றி பெற்றாா். தற்போது அமைப்புரீதியான அந்த மாவட்ட தலைவராக அவா் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் கிருஷ்ணாநகா் தொகுதியில் போட்டியிட அவருக்கு கட்சி மேலிடம் மீண்டும் வாய்ப்பளிக்கலாம் என்ற ஊகம் ஏற்பட்டுள்ளது.

