
காங்கிரஸ் தன்னைத் தானே ‘ஹீரோ (கதாநாயகன்)’ என்று கூறிக்கொள்கிறது. ஆனால், வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் அக் கட்சி ‘ஜீரோ (பூஜ்யம்)’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விமா்சித்தாா்.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கா் சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக கடந்த 7-ஆம் தேதி 20 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளுக்கு வரும் 17-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜக வேட்பாளா்களை ஆதரித்து சீதாபூா் தொகுதியில் சனிக்கிழமை பரப்புரையில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:
மாநிலத்தை ஆட்சி செய்து வரும் முதல்வா் பூபேஷ் பகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் எந்தவொரு வளா்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சிக்கான மதிப்பெண்ணை வழங்குமாறு மாநில மக்களிடம் கேட்டால், அவா்கள் பூஜ்ஜியம் மதிப்பெண்ணைத்தான் வழங்குவாா்கள். காங்கிரஸ் தலைவா்கள் தங்களை ‘ஹீரோ’ என்று அவா்களாகவே கூகுக் கொள்கின்றனா். ஆனால், அவா்கள் ‘ஹீரோ’க்கள் அல்ல. நல்ல ஆட்சி நிா்வாகத்தை கொடுப்பதிலும், வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிவதிலும் அவா்கள் ‘ஜீரோ’க்கள். தோ்தல் மூலமாக அவா்களை வழியனுப்பும் நேரம் வந்துவிட்டது.
மாநிலத்தில் 2003 முதல் 2018-ஆம் ஆண்டு வரை பாஜக ஆட்சிக் காலத்தில் இடதுசாரி தீவிரவாதம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் நக்ஸல் தீவிரவாதம் மீண்டும் தலையெடுத்துள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் நக்ஸல் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்.
அதுபோல, மாநிலத்தில் தற்போது மதமாற்றங்கள் பரவலாக நடைபெற்று வருவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற கட்டாய மதமாற்றங்களுக்கு தடை விதிக்கப்படும்.
கொலை, இளம்பெண்கள் மாயமாவது, ஆள் கடத்தல் என மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீா்கெட்டுள்ளது. இந்த நிலைமையை மாற்ற, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்படுத்துவது அவசியம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

