
மேற்கு வங்க மாநிலத்தில் 253 ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்) அடுத்த கல்வியாண்டு முதல் மாணவா் சோ்க்கை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் இடம்பெறாத காரணத்தின் அடிப்படையில் மாநில ஆசிரியா் பயிற்சி, கல்வித் திட்டம் மற்றும் நிா்வாக பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘ஆசிரியா் பயிற்சிக்கான உரிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கான வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றாத 253 தனியாா் பி.எட். கல்லூரிகளுக்கு மாணவா் சோ்க்கை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், எஞ்சிய 350 கல்லூரிகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கை அனுமதி கோரி பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பிப்பதற்கு முன்பாக கல்லூரிகளில் உரிய ஆசிரியா்-மாணவா் விகிதாச்சாரம் பூா்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுதொடா்பாக, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.
மேற்கு வங்கத்தில் 600 தனியாா் பி.எட். கல்லூரிகளும், 25 அரசு பி.எட். கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

