வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் நினைத்தால், பிரியங்காவை களமிறக்க வேண்டியது முக்கியம். இது தான் சிறந்ததாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் ஆன்மிகவாதியுமான ஆச்சார்யா பிரமோத் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஆன்மிக குருவுமான ஆச்சார்யா பிரமோத் அளித்த பேட்டி: காங்கிரசில் சில தலைவர்கள் கடவுள் ராமரை வெறுக்கின்றனர் என கருதுகிறேன். அந்த தலைவர்கள், ‛ ஹிந்து’ என்ற வார்த்தையையும் வெறுக்கின்றனர். ஹிந்து மத துறவிகளை அவமானப்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.
இண்டியா கூட்டணியின் முக்கிய நோக்கம், பிரதமர் மோடியை தோற்க்கடித்து, பாஜ., அரசை அகற்றுவது தான். ஆனால், சோகமான விஷயம் என்னவென்றால், அதிகமாக மோடியை வெறுக்க துவங்கிய அவர்கள், நாட்டையும் வெறுக்க துவங்கியுள்ளதை மறந்துவிட்டனர்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தால், அவர்கள் எதிர்க்கின்றனர். ரயிலுக்கு வந்தே பாரத் என பெயர் வைத்தால், அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மோடியை விமர்சிப்பதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், வெறுப்பது சரியானது அல்ல. எதிர்க்கட்சிகள் குழப்பம் அடைந்து அனைத்தையும் மறந்துவிட்டனர். அனைத்து தவறுகளுக்கும் மோடியை விமர்சிக்கின்றனர்.
ஆனால், காங்கிரஸ் நேர்மையற்ற கட்சி என அகிலேஷ் கூறுகிறார். இதனை மோடிக்காகவா அவர் சொன்னார். நிதிஷ்குமார் சொன்ன கருத்துக்காக மோடியை விமர்சிக்க முடியுமா? நிதிஷ்குமாரின் பேச்சு குறித்து இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை.காங்கிரஸ் ஏமாற்றிவிட்டதாக அகிலேஷ் சொல்கிறார். காங்கிரஸ் மீது ஆம் ஆத்மி குற்றம்சாட்டுகிறது. மம்தாவை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சிக்கிறார்.
பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் நினைத்தால், பிரியங்காவை களமிறக்க வேண்டியது முக்கியம். இது தான் சிறந்ததாக இருக்கும். 2024 தேர்தல் மகாபாரத யுத்தத்திற்கு இணையானது. இவற்றை எல்லாம் தாண்டி ராகுல் உயர்ந்துள்ளார். அவருக்கு எந்த பதவி மீதும் ஆசையில்லை. நம்பிக்கை மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மையில் என்னை பொறுத்தவரை பிரியங்காவை விட பெரிய தலைவர் யாரும் இல்லை என கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

