புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வோம் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் சொலாரா கம்பெனியில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருவதாலும், அப்பகுதி சுற்றுச்சூழலை பாதுகாத்திட கம்பெனியை மூட வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் நேற்று சட்டசபை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர், இணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச் செயலாளர் நாகமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:
விபத்து நடந்த சொலாரா கம்பெனியை மூட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தொகுதி எம்.எல்.ஏ., கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறார். கம்பெனியில் நடந்த விபத்து குறித்து மருத்துவ புலனாய்வு நிபுணர்களை கொண்டு உயர்மட்ட விசாரணைக்கு கவர்னர், முதல்வர் உத்தரவிட வேண்டும்.
மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சியில் நடைபெற்று வந்த அலங்கோலங்களை கூட்டணி தர்மத்திற்காக அ.தி.மு.க., பொறுத்துக் கொண்டு இருந்தது. இனியும் நாம் பொறுக்க வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.,கூட்டணி ஆட்சியின் அனைத்து முறைகேடுகளையும் மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வோம். பா.ஜ.,வின் மிரட்டல், உருட்டலுக்கு அ.தி.மு.க., பயந்துவிடாது.
வரும் லோக்சபா தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். தேர்தலுக்கு பின், நாட்டின் பிரதமராக யார் வரவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் இடத்தில் அ.தி.மு.க, பொதுச்செயலாளர் பழனிசாமி இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.


ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்கு வருடம் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சியை செய்ததற்கு முக்கிய காரணமே பிஜேபி என்பதை மறந்து பேசக்கூடாது. மேலும் பிஜேபி யை பார்த்து பயப்பட வேண்டும் என்று யாருமே சொல்லவில்லை