பெர்லின் : ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், துப்பாக்கியால் சுட்டபடி விமான நிலையத்திற்குள் குழந்தையுடன் காரில் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்நாட்டு விமான நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன் தினம் காரில் வந்த மர்ம நபர், பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி விமான நிலையத்திற்குள் புகுந்தார்.
மேலும் இரண்டு பெட்ரோல் குண்டுகளையும் வீசினார். இதைப் பார்த்து, விமான நிலைய போலீசார், பயணியர் அதிர்ச்சியடைந்தனர்.
விமான நிலையத்திற்குள் புகுந்த அந்த நபர், ‘ரன்வே’ எனப்படும் ஓடுபாதையில் நின்றிருந்த விமானத்திற்கு கீழே காரை நிறுத்தி வைத்தார். அவருடன் காரில் 4 வயது பெண் குழந்தையும் இருந்தது.
போலீசார் விசாரணையில், காரில் உடனிருப்பது அவரது மகள் என்றும், மனைவியிடமிருந்து குழந்தையை பிரித்து, தன் பாதுகாப்பில் வளர்க்க அனுமதிக்கக் கோாரி, இவ்வாறு அவர் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
அந்த நபருடன் போலீசார், 16 மணி நேரம் பேச்சு நடத்தினர். இதற்கு பின், அவர் கைது செய்யப்பட்டார். குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது. விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் காரணமாக, 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஹம்பர்க் விமான நிலையமும் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டது.

