சண்டிகர்: ” காங்கிரசும், பாஜ., வும் ஆம் ஆத்மியை விட சிறிய கட்சிகள் தான் என்று சவாலுடன் சொல்ல முடியும்” என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: நீங்கள் விரும்பும் குற்றத்தை செய்துவிட்டு, அவர்களின் (பா.ஜ.,) கட்சியில் சேர்ந்து பாதுகாப்பு பெறலாம். அலாக்கத்துறையால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் ஊழல்வாதி அல்ல. உண்மையான ஊழல்வாதி அமலாக்கத்துறைக்கு பயந்து பா.ஜ.,வுக்கு போனவர் தான். யார் ஊழல்வாதி?.
காங்கிரசும், பா.ஜ., வும் ஆம் ஆத்மியை விட சிறிய கட்சிகள் தான் என்று சவாலுடன் சொல்ல முடியும். காங்., மற்றும் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் எந்த கிராமத்துக்குச் சென்று தங்கள் கட்சியில் இணையுமாறு கூறினாலும் மக்கள் கேட்க மாட்டார்கள். ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்காரர் ஒருவர் கிராமத்திற்குச் சென்றால் ஆம் ஆத்மி கட்சியில் சேர விரும்புவதாக ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள் கூறுகிறார்கள். ஆம் ஆத்மி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இன்று, 11 ஆண்டுகளில், பா.ஜ., காங்கிரசுக்கு அடுத்தபடியாக, நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, ஆம் ஆத்மி திகழ்கிறது. இதற்கு மோடி பயப்படுகிறார். எங்கள் கட்சியின் வேகத்தை பார்த்து பயப்படுகிறார். ஆம் ஆத்மி முன்னோக்கி செல்கிறது. ஒவ்வொரு கட்சியையும் ஆட்சியில் இருந்து வெளியேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

