தமிழகத்தில் துடைப்பம், மிதியடி , கிச்சன் டவல், லுங்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நூல் வழங்கும் ஓபன் எண்ட் நூற்பாலைகள் நவம்பர் 7 முதல் 30 வரை செயல்படாது என்று அறிவித்துள்ளன. அதேபோல், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள நெசவாளர்கள் நவம்பர் 5 முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். .
நவம்பர் 4, 2023 அன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜி.அருள்மொழி, தமிழகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் ஒரு நாளைக்கு ₹60 கோடி மதிப்புள்ள நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. “கடந்த ஆறு மாதங்களாக, ஆலைகள் அவற்றின் திறனில் 50% மட்டுமே இயங்குகின்றன. ஆலைகளை நடத்தினால் நஷ்டம் ஏற்படும் என்பதால், உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்,” என்றார்.
திரு.அருள்மொழி கூறுகையில், ஆலைகளுக்கான முக்கிய மூலப்பொருள், வழக்கமான ஜவுளி ஆலைகளில் இருந்து வரும் பருத்திக் கழிவுகள்தான். “கழிவு பஞ்சு விலை கிலோ ₹97 ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு கிலோ ₹115 ஆக உள்ளது. கழிவு பஞ்சு விலை கிலோவுக்கு 20 ருபாய் குறைக்க வேண்டும்.
நூல் ஒரு கிலோ ₹140 முதல் ₹150 வரை விற்கப்படுகிறது, இது ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த விலையாகும். கடந்த ஐந்தாண்டுகளில் மின்சாரம், உழைப்பு மற்றும் மூலப்பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது,” இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்றார்.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், தமிழ்நாட்டை விட 30% குறைந்த விலையில் நூலை விற்க முடிகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கழிவுப் பருத்தி ஏற்றுமதியை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும், பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் மற்றும் செயற்கை இழைகளுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்த வேண்டும். மாநில அரசு LT CT மின் நுகர்வோருக்கான பீக் ஹவர் கட்டணத்தை நீக்கி, நிலையான கட்டணத்தை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் ஜவுளித்துறை செயல்பாடுகள் புத்துயிர் பெற சிறப்பு அந்தஸ்து பெற்று ஜவுளித் தொழிலை ஆதரிக்க வேண்டும் என்றார் திரு.அருள்மொழி.

