நீட் விலக்குக்காக 2017-ம் ஆண்டு அதிமுக அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை, குடியரசுத்தலைவர் நிராகரித்துவிட்டார். எனவே, தற்போதைய திமுக அரசின் தீர்மானத்தை மட்டும் அவர் ஏற்றுக் கொள்வார் என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.
இந்நிலையில், நீட் தேர்வை தமிழக அரசால் ரத்து செய்யமுடியுமா… அல்லது எதிர்க்கட்சிகள் சொல்வது போல முடியாது என்று தெரிந்தும் திமுக வெறுமனே அரசியலுக்காக செயல்பட்டு வருகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
கல்வியாளர்கள் தரப்பிலோ நீட் தேர்வை நிறுத்துவதற்கு இனி வாய்ப்பில்லை என்கிறார்கள். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றமும், தேசிய மருத்துவ ஆணையமும் அறிவித்து விட்டதால், இனிமேல் நீட் தேர்வை நிறுத்த வாய்ப்பில்லை.
எனினும், சில தலைவர்கள் போலியாகவும், சுயலாபத்திற்காகவும் வாக்குறுதிகளை கொடுக்கின்றனர். 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களை கொண்ட இந்தியா போன்ற பெரிய நாட்டில், பல்வேறு வாரியத்தின் கீழ் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு படிப்பில் சேர்வதற்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தரத்தை உறுதி செய்து, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில், பொதுவான ஒருங்கிணைந்த வலிமையான நுழைவுத்தேர்வு கட்டாயமாகிறது. இத்தேர்வு வாயிலாக, நாட்டின் எந்தப் பகுதியிலும், எந்தக் கல்வி நிறுவனத்திலும் சேரும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும். இதனால், மாநில அரசின் இடஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள்.

