ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஹீத்ஸ்ட்ரீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 49வது வயதில் காலமானார் என்கிற தகவல், இன்று காலை சர்வதேச மீடியாக்கள் மூலம் வெளியானது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி மிகவும் வலுவாக இருந்த காலத்தில் அவர், சிறப்பான அணியை வழிநடத்தினார். 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். ஸ்ட்ரீக், ஐபிஎல்., போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்தார்.
கத்துக்குட்டியாக பார்க்கப்பட்ட ஜிம்பாவே அணியை, தலைசிறந்த அணிகளோடு சரிக்கு சரிமமாக மோதும் பலமிக்க அணியாக மாற்றியவர். பவுலிங், பேட்டிங் என எல்லாவற்றிலும் ஜொலித்தவர். கடுமையான காலகட்டத்தில் அணியை திறம்பட வழிநடத்தியவர்.
அணியின் ஒரே அடையாளமாக இருந்து, முன்னோக்கி அழைத்துச் சென்றவர். ஹீத் ஸ்ட்ரீக் காலம், ஜிம்பாவே அணியின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். ஒருநாள் போட்டிக்கு கூட தகுதியில்லாத அணியாக கூறப்பட்ட ஜிம்பாவே அணியை, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜொலிக்க வைத்தார்.
பெரிய ஆக்ரோஷம் இல்லாதவர் என்றாலும், பந்து வீச்சிலும், வியூகத்திலும் அனல் பறப்பார். பல நேரங்களில் இந்திய அணிக்கு சிம்ம சொப்பணமாக இருந்திருக்கிறார்.
அவருடைய திறமைக்கு மதிப்பளித்து தான், கொல்கத்தா நைட் ரைட்டஸ் அணியின் பயிற்சியாளராக அவரை நியமித்தனர். இவ்வளவு சிறப்புகளை கொண்ட அவர், திடீரென இன்று காலை, புற்றுநோயால் கடும் அவதியடைந்து உயிரிழந்ததாக தகவல் வந்தது.
இந்த தகவல் ஜிம்பாவே கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்த்தியது. கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அவர் உயிரோடு இருப்பதாக ஓய்வு பெற்ற ஜிம்பாவே வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரி ஒலங்கா கூறியுள்ளார். முதலில் அவரும் இரங்கல் ட்விட் வெளியிட்டிருந்த நிலையில், பின்னர் நேரடியாக ஸ்ட்ரீக்கிடம் சாட் செய்த ஒலங்காவிற்கு, அவரிடம் இருந்து ரிப்ளை வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்த ஒலங்கா, தன்னுடைய முந்தைய ட்விட்டை டெலிட் செய்து விட்டு, ஸ்ட்ரீக் உயிரோடு இருப்பதாக அறிவித்துள்ளார்.

