Last Updated:
நேற்று மாலத்தீவு பாதுகாப்பு மற்றும் தேசிய சேவை அமைச்சர் ஹசன் ரஷீதையும் அஜித் தோவல் சந்தித்து இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தார்
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனக் குறிப்பிட்ட தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தக் கடல் பரப்பு நாடுகளைப் பிரிக்கும் எல்லையாக இல்லாமல் இணைக்கும் பாலமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாலத்தீவின் தலைநகர் மாலேயில் இன்று நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (Colombo Security Conclave – CSC) 8-வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான கூட்டத்தில் பேசிய அவர், கடலோர நாடுகளிடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் என்று கூறினார்.
இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நாடுகளின் பகிரப்பட்ட கடல் பரப்பு மற்றும் நாகரிகப் பாரம்பரியத்தைச் சுட்டிக்காட்டிய அஜித் தோவல், இப்பகுதியின் பாதுகாப்பும் செழிப்பும் ஒன்றோடொன்று நெருக்கமாகப் பிணைந்துள்ளன என்றார். மாறிவரும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள உறுப்பு நாடுகளின் கூட்டுத் திறனை வளர்க்க இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ (Neighbourhood First) கொள்கை மற்றும் ‘மஹாசாகர்’ (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் முக்கியச் சங்கமமாகக் கொழும்பு பாதுகாப்பு மாநாடு திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா, மாலத்தீவு, இலங்கை, மொரிஷியஸ், வங்கதேசம் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய ஆறு நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு; கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பது, கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பது, சைபர் பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புப் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகிய ஐந்து முக்கியத் தூண்களின் அடிப்படையில் செயல்படுகிறது.
நிரந்தரச் செயலகம் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியவற்றுடன் இந்த அமைப்பு நிறுவனமயமாக்கப்பட்டு வருவது ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்திற்கு இடையே நேற்று மாலத்தீவு பாதுகாப்பு மற்றும் தேசிய சேவை அமைச்சர் ஹசன் ரஷீதையும் அஜித் தோவல் சந்தித்து இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சமீபத்தில் பாகிஸ்தான் சென்று பாதுகாப்பு மற்றும் கடல்சார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்த சூழலில், இரு நாடுகளுக்கு இடையிலான இந்த உயர்மட்டச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் வெளிப்புற சக்திகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் முதன்மைப் பங்கை இக்கூட்டம் உறுதிப்படுத்துவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

