Last Updated:
இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நேபாளத்தின் வளர்ச்சிக்காக 24,000 கோடி நேபாள ரூபாய் (NPR 24,000 Crore) மதிப்பிலான சிறப்பு வளர்ச்சித் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
நேபாளப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு பாலேந்திர ஷா மேற்கொள்ளும் முதல் இருதரப்பு இந்தியப் பயணம் இதுவாகும். டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த நிதியுதவி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், எதிர்காலச் சவால்களை நேபாளம் சிறப்பாக எதிர்கொள்ளவும் பெரிதும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், உலகின் இளம் பிரதமராக ஐக்கிய நாடுகள் சபையில் பாலேந்திர ஷா உரையாற்றியபோதே அவரது தொலைநோக்குப் பார்வை வெளிப்பட்டதாகவும், நேபாள இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அவரது வெற்றி பிரதிபலிப்பதாகவும் மோடி பாராட்டினார்.
இந்தியா – நேபாளம் இடையிலான உறவு வெறும் அண்டை நாட்டு உறவல்ல, அது அசைக்க முடியாத நம்பிக்கையாலும் பரஸ்பர ஆதரவாலும் கட்டமைக்கப்பட்ட பிணைப்பு என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கடினமான காலங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் உறுதியளித்தார். பகவான் ராமரும், அன்னை சீதையும் இரு நாடுகளின் பொதுவான நாகரிகம் மற்றும் நம்பிக்கையின் அடையாளங்கள் என்று குறிப்பிட்ட மோடி, எல்லை தாண்டிய போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் விதமாக உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி கன்டோன்மென்ட் மற்றும் நேபாளத்தின் ஜனக்பூர் தாம் இடையிலான வாராந்திர ‘சரயு-கமலா எக்ஸ்பிரஸ்’ (Saryu-Kamala Express) ரயில் சேவையை பாலேந்திர ஷாவுடன் இணைந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்தியாவின் காண்ட்லா மற்றும் பாரதீப் துறைமுகங்களைப் பயன்படுத்த நேபாளத்திற்கு அனுமதி வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
கல்வி, சுகாதாரம், விவசாயம், விளையாட்டு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் பாலேந்திர ஷாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலும் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

