அதில், உயர் நீதிமன்றப் பிரிவு அமர்வின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், நவம்பர் 24, 2026 அன்று நடைபெறும் திருவிழாவின் தனித்துவமான சூழலைக் கருத்தில் கொண்டு, தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட குழுவினர் மூலம் ‘தீபத்தூண்’ என அடையாளம் காணப்பட்ட கல் தூணில் சடங்கு விளக்கு ஏற்ற ஒருமுறை தற்காலிக ஏற்பாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த அனுமதி எந்தவொரு பாரம்பரிய, மத அல்லது சொத்துரிமையை அங்கீகரிப்பதாகவோ, நடைமுறைப்படுத்துவதாகவோ கருதப்படாது என்றும், 2026 விழாவிற்கு மட்டுமே பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
மேலும், பொதுமக்கள், ஊர்வலங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், மதுரை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பு அதிகாரியாகச் செயல்படவும், காவல் ஆணையர் பாதுகாப்பு வழங்கவும், தேவைப்பட்டால் சி.ஆர்.பி.எஃப் படையை வரவழைக்கவும், இந்தியத் தொல்லியல் துறை விதிமுறைகளை நிர்ணயிக்கவும், தர்கா உள்ளிட்ட பிற மத வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அத்துடன், திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல் தூண் பாரம்பரிய மத வழிபாட்டுத் தலமா என்பது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையிலும், எந்தவொரு உரிமையும் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், ஏற்கனவே உள்ள நிலையை மாற்றும் வகையில் கட்டாய இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முக்கிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மனுதாரர்கள் கோரிய நிவாரணத்தை 2026-ஆம் ஆண்டிற்கான இடைக்கால உத்தரவாக வழங்குவது, மேல்முறையீட்டு மனுக்களின் நோக்கத்தையே பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபத்தூணில் விளக்கு ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டாலும், பாரம்பரிய இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும் என்பதால் யாருக்கும் திருவிழா மறுக்கப்படவில்லை; வழக்கு பின்னாளில் சாதகமாக வந்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், தர்காவுக்கு மிக அருகாமையில் உள்ள இடத்தில் அனுமதி வழங்குவது, நிரூபிக்கப்படாத உரிமைகோரலின் அடிப்படையில் நீண்டகால நிலையை மாற்றியமைத்து, திரும்பப் பெற முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என வாதிடப்பட்டுள்ளது.
