இந்த நிலையில், பீகார் போலீசாருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் ரகசியமாக ஈடுபட்ட கும்பல் குறித்த ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. விசாரணையில், வாட்ஸ்அப் மூலமாகவே பல்வேறு மாநிலங்களில் இந்த சூதாட்டம் நடத்தப்பட்டு வருவதும், சூதாட்டத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு பணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் QR கோடுகள் அனுப்பப்படுவதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் இருப்பவர்களைப் பிடிக்கவும், அதன் செயல்பாடுகளை முடக்கவும் பீகார் சிறப்பு அதிரடிப்படையினர், பல்வேறு மாநில போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். பாட்னாவில் 7 இடங்கள், கொல்கத்தாவில் 2 இடங்கள், டெல்லியில் 3 இடங்கள், காஜியாபாத்தில் ஒரு இடம், பிரயாக்ராஜில் 2 இடங்கள், ராஞ்சியில் ஒரு இடம் என மொத்தம் 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில், சூதாட்ட நெட்வொர்க்கின் முக்கிய நபராக சந்தேகிக்கப்படும் சந்தீப் குமார் குப்தா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 37 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த சூதாட்டம் எப்படி நடத்தப்பட்டது என்பதுதான் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்ளும் நபர்களுக்கு, சூதாட்டத்தில் ஈடுபடுவது எப்படி என விளக்கி, வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது QR கோடுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் பணத்தைச் செலுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், ஆரம்பத்தில் சிறிய தொகைகளை வெல்லும் வகையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த வெற்றியை நம்பி, பலரும் அதிகப் பணத்தை முதலீடு செய்யத் தொடங்குவார்கள். அதன்பின் தான் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு ட்விஸ்ட் காத்திருக்கும். சின்ன லாபத்தை பார்த்ததும், பணத்தை கொட்டுபவர்களுக்கு அதன்பின் பெரிய பெரிய இழப்புகள் ஏற்படும். இந்த ஆன்லைன் சூதாட்டத்தின் அமைப்பே பணம் பறிக்கம் நோக்கில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சிலருக்கு வெற்றித் தொகையும் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், சூதாட்டத்தின் மூலம் பெறப்பட்ட அந்த மோசடி பணம் ஒரே வங்கிக் கணக்கில் வைத்திருக்கப்படவில்லை. போலி ஆவணங்கள், பிற நபர்களின் பெயர்கள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டு, அங்கிருந்து பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதுவரை 44 வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 88 கோடியே 52 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 87 கோடியே 62 லட்சம் ரூபாய் வெளியே மாற்றப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 99 சதவீதப் பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த நெட்வொர்க்கின் முக்கிய நபர் துபாயில் இருந்து செயல்பட்டதாகவும், வெளிநாட்டு சர்வர்களில் இயங்கும் சூதாட்ட இணையதளங்கள் மூலம் இந்தச் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். சோதனையின்போது 22 லட்சம் ரூபாய் ரொக்கம், 300-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகள், நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள், 5 லேப்டாப்கள், 6 டேப்லெட்டுகள், சுமார் 500 கிராம் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சூதாட்ட நெட்வொர்க்கில் வேறு யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர்? பணப் பரிவர்த்தனைகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பதைக் கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
