Last Updated:
வந்தாரா தலைமைச் செயல் அதிகாரி விவான் கரானி கூறுகையில், ராஜா மீண்டும் நிற்கவும், நடக்கவும், ஒரு நாள் ஓடவும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடை எலும்பு முறிவு காரணமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் 7 வார ஆசிய யானைக் குட்டியான ‘ராஜா’, மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக அஸ்ஸாமிலிருந்து குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள வந்தாரா (Vantara) மையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அனந்த் அம்பானி நிறுவிய வந்தாரா அறக்கட்டளை முன்னெடுத்துள்ள இந்த மூன்றாவது வான்வழி மீட்பு நடவடிக்கை மூலம், சுமார் 2,500 கிலோமீட்டர் சாலைப் பயணம் தவிர்க்கப்பட்டு வெறும் நான்கு மணி நேரத்தில் யானைக் குட்டி பாதுகாப்பாக ஜாம்நகரை அடைந்துள்ளது.
அஸ்ஸாமின் கோகாமுக் பகுதியில் கடந்த மாதம் 2-ஆம் தேதி பிறந்த ராஜாவுக்கு, பிறந்த முதல் நாளிலேயே மிரண்டுபோன யானை உதைத்ததில் வலது தொடை எலும்பு முறிந்தது. தாய்க்குப் பால் சுரக்காததாலும், அசைவற்று இருந்ததாலும் நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்சனைகளும் ஏற்பட்டன.
கடந்த ஏழு வாரங்களாக அஸ்ஸாமில் உள்ள உரிமையாளரின் இடத்திலேயே ராஜாவுக்கு வந்தாரா கால்நடை மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வந்தது. தற்போது தீவிர மருத்துவமனை சிகிச்சை மற்றும் மேம்பட்ட எலும்பியல் சிகிச்சை தேவைப்படுவதால், மருத்துவர்களின் மேற்பார்வையில் சிறப்புப் பெட்டியில் வைத்து வான்வழியாக மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து வந்தாரா தலைமைச் செயல் அதிகாரி விவான் கரானி கூறுகையில், ராஜா மீண்டும் நிற்கவும், நடக்கவும், ஒரு நாள் ஓடவும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ராஜாவுக்கு முன்னதாக, 2026 நவம்பர் 6-ஆம் தேதி கேரளாவில் உள்ள ஒரு சரணாலயத்திலிருந்து 18 மாத வயதுடைய ஆதரவற்ற யானைக் குட்டியான ‘மாயா’வும் விமானம் மூலம் ஜாம்நகருக்குக் கொண்டு வரப்பட்டது. கால்களில் பல முறிவுகள், பலவீனமான எலும்புகள், மார்புத் தொற்று மற்றும் பாராதைராய்டு தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த மாயாவுக்கு சிறப்புத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த ஆகஸ்ட் 2026-ல் அசாம்-நாகாலாந்து எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய 53 வயது பெண் யானையான ‘ஜாய்மோதி’யும் காயங்கள், தொற்றுகள் மற்றும் பார்வைக் குறைபாடுகளுடன் மீட்கப்பட்டு வான்வழியாக ஜாம்நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
தற்போது ராஜா, மாயா மற்றும் ஜாய்மோதி ஆகிய மூன்று யானைகளும் ஜாம்நகரில் உள்ள வந்தாராவின் அதிநவீன யானை மருத்துவமனையில் நிபுணத்துவம் பெற்ற கால்நடை மருத்துவர்களின் மேற்பார்வையில் தொடர் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பெற்று வருகின்றன.

