Last Updated:
இந்தியாவில் முதல்முறையாக பறவைக் காய்ச்சலைத் தடுக்க H5N1 தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20-ம் தேதி அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் இதனை அறிமுகம் செய்கிறார்.
பறவைக் காய்ச்சலை தடுக்க இந்தியாவில் முதல்முறையாக H5N1 என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட H5N1 தடுப்பூசியை வருகின்ற நவம்பர் 20-ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை அறிமுகம் செய்கிறார்.
தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழி உள்ளிட்டவை இறந்ததாக தகவல் பரவிய நிலையில், தடுப்பூசி தயாரிக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய வேளாண் ஆராய்சி கழகம் பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளை பாதுகாக்கும் வகையில் பிரத்யேக தடுப்பூசியை தயாரித்து உள்ளது. போபாலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தடுப்பூசியை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இருப்பினும், வணிக ரீதியாக தடுப்பூசி எப்போது கிடைக்கும்?, கோழிப் பண்ணைகளில் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? கோழிப் பண்ணைகளுக்கு எப்போது தடுப்பூசி விநியோகிக்கபடும் என்பன உள்ளிட்ட எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
H5N1 தடுப்பு மருந்தின் சிறப்பம்சங்கள்
- கோழிகளுக்கு ஒரே ஒரு முறை H5N1 டோஸ் தடுப்பு மருந்தை செலுத்தினால், அது அடுத்த 6 மாதங்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கும்.
- இந்தத் தடுப்பூசி முட்டையிடும் மற்றும் இனப்பெருக்க கோழிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
- தடுப்பூசி போடப்பட்ட கோழிகள் மற்றும் இயற்கையாக நோய்த்தொற்று ஏற்பட்ட கோழிகளை ரத்தப் பரிசோதனை மூலம் எளிதில் வேறுபடுத்த முடியும்

