தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் அத்தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் விளாத்திகுளம் பகுதியில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ எந்தத் தகவலும் முறையாகத் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே இதுபோன்று ஒருமுறை நடைபெற்றபோது மாவட்ட ஆட்சியருக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன். ஆய்வுகள் நடக்கும்போது 24 மணி நேரத்திற்கு முன்பு எனக்குத் தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது வரை அவர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

தொகுதியில் உள்ள குறைகள் குறித்தும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விகளுக்கு அச்சப்பட்டு ஆய்வுக் கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. ஆய்வுக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் விதி. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா அல்லது தன்னிச்சையாக நடத்துகின்ற அரசா என்று தெரியவில்லை. இங்குள்ள மக்கள் பிரச்னைகள் குறித்து ஒரே மேடையில் விவாதம் செய்வோம்.
