Last Updated:
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தோசை கடையில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்கள், கடையை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கடை ஊழியர்கள் தந்தையை தாக்கியதால் பழிக்குப்பழியாக ஆக்ரோஷத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் நடந்தது என்ன?.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரபல தோசைக் கடையில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி ஊழியர்களுக்கும், சாப்பிட வந்திருந்த ஒரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தத் தகராறு முற்றியதில், சாப்பிட வந்தவரை ஊழியர்கள் சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, தாக்குதலுக்கு உள்ளான நபரின் மகள்கள், வாரணாசி பெலுபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் அளித்தும் தோசை கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகியும் நடவடிக்கை இல்லை என்ற ஆத்திரத்தில், தந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் அதே கடைக்குச் சென்ற மகள்கள் கடும் ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 14-ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், ஸ்கூட்டரில் தோசைக் கடைக்கு வந்திறங்கிய சகோதரிகள், கடையில் வைக்கப்பட்டிருந்த தோசை மாவு நிரப்பப்பட்ட பெரிய பாத்திரத்தைக் கவிழ்த்து, மாவைத் தரையில் கொட்டியுள்ளார். தொடர்ந்து ஊழியர் மீது தண்ணீரை வீசியதுடன், கடையை மூடுமாறும் ஆவேசமாகக் கத்தியுள்ளார்.
தந்தையைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கு எதிராகவும் கேள்விகளை எழுப்பியுள்ளார். இதனால் கடையில் இருந்த ஊழியர்கள் அச்சத்தில் செய்வதறியாமல் உறைந்து நின்றனர். இதற்கிடையே, அங்கு கூடியிருந்த பொதுமக்களில் ஒரு பெண், குழந்தைகள் அருகில் இருப்பதால் இப்படி ரகளையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அவரிடமும் ஆவேசமாகப் பதிலளித்த பெண்கள், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் பால்முகுந்த் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், கடைக்கு வந்த பெண்கள் பணம் கேட்டு மிரட்டியதாகவும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைத் தாக்கியதாகவும், கடையில் இருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பணப்பெட்டியில் இருந்த பணத்தை எடுக்க முயன்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண்களை காவல்நிலையம் அழைத்து தோசை கடை சூறையாடல் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். தந்தையை தாக்கியதால் ஹோட்டல் பொருட்களை சூறையாடிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

