Last Updated:
டெல்லியில் சிபிஎம், சிபிஐ தலைவர்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘Belonging A Journey of Love’ நூல் வெளியிட்டு விழா இன்று மாலை டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட காங்கிரஸ் முதலமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார். இந்தப் பயணத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் இணைந்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சி அலுவலகங்களில் அக்கட்சிகளின் பொதுச் செயலாளர்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியுள்ளார்.
அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியை டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமையகமான கோபாலன் பவனில் வைத்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவை டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகமான அஜோய் பவனில் வைத்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்துள்ளார்.
தமிழ்நாட்டில் த.வெ.க கூட்டணி அரசை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரித்தாலும் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை மாநிலத் தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்த சந்திப்புகளில், தேசிய அளவிலான தவெகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்தும், தேசிய அளவில் இந்தியா கூட்டணி அதிகாரப்பூர்வமாக இணைய தவெக முடிவு எடுத்திருப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

