Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மேகதாது திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும், மத்திய அரசு இறுதி அனுமதி வழங்க வேண்டும் என்றும் கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா மாநிலத்தில் ரூ. 15,600 கோடிக்கும் அதிகமான திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியிலும், மற்ற பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அப்படியாக கர்நாடகா மாநிலம் மைசூரில் நடைபெற்ற காஸ்மோஸ் வான்நோக்கி அரங்கை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கர்நாடகா மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் பங்கேற்றார்.
தொடர்ந்து காஸ்மோஸ் வான்நோக்கி அரங்க திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “காவிரி ஆற்றின் அணையை பார்வையிட்டீர்கள். மேகதாது திட்டத்தை கர்நாடகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது.
சட்டரீதியாக எங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். வனத்துறை அனுமதி தொடர்பான நடைமுறைகள் முடிந்துவிட்ட நிலையில், மத்திய அரசு இதற்கான இறுதி அனுமதியை வழங்க வேண்டும். இது ஒரு மிக முக்கியமான சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் (balancing reservoir) ஆகும். எனவே, உங்கள் நிர்வாகம் எங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என பேசியுள்ளார்.
#WATCH | Mysuru, Karnataka: Chief Minister DK Shivakumar says, “The Prime Minister has come here to dedicate the COSMOS-Mysuru Planetarium to the students, the researchers, and the people of Karnataka. You are here to help us. You just saw the dam of Cauvery. The Supreme Court has delivered a clear verdict that Mekedatu has to be built in Karnataka, and no one can stop it. We want you to help us legally. We want the Union Government to grant final clearance on the forest clearances that have been done. It is a vital balancing reservoir. So, I hope that your administration will help us. Let us all work together…”
(Source: DD News)— ANI (@ANI) November 13, 2026
கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இதற்கு முன்பாகவும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என பேசியிருந்தார். இதற்கு நேற்று பதில் அளித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், “மேகதாது அணையைக் கட்டியே தீருவேன் என கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொல்வதுபோல் ஒரு போதும் நடக்காது” எனத் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் என்.ஆனந்த் நேற்று இந்தக் கருத்தை தெரிவித்திருந்த நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையிலேயே மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “மேகதாது திட்டத்தை கர்நாடகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது. மத்திய அரசு இதற்கான இறுதி அனுமதியை வழங்க வேண்டும்” என நேரடியாக கோரிக்கை வைத்திருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.

