Last Updated:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கின.
மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை இம்மாத இறுதியில் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்படும் இந்த புதிய சட்டத் திருத்தத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தற்போது உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையான 543-ஐ 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மக்களவை இடங்களை 50 சதவீதம் உயர்த்த இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலங்களின் தொகுதி விகிதாச்சாரம் குறையாமல் 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படியே தக்கவைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம் இந்த உயர்வால் வட மாநிலங்களுக்கு கூடுதல் இடங்களும், தென் மாநிலங்களுக்கு குறைந்த இடங்களும் கிடைக்கும் என தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. ஆனால், அந்த மசோதா தோல்வியில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கின. இதனை தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்ட பிறகு 4-5 நாள்களில் கூட்டத் தொடரை முறைப்படி முடித்துவைக்கும் அறிவிப்பை குடியரசுத் தலைவர் வெளியிடும் நிலையில், மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும் இந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை இம்மாத இறுதியில் நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 361 வாக்குகள் தேவைப்படுகிறது. தற்போது மக்களவையில் அனுமதிக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கு பதிலாக, 3 இடங்கள் காலியாக உள்ளதால் 540 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். அதில், பெரும்பான்மைக்கு தேவையானதை விட 15 முதல் 18 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மசோதா வெற்றி பெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
எனினும், இதுகுறித்த இறுதி முடிவு மற்றும் சிறப்புக் கூட்டத் தொடருக்கான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாகவும் சிறப்பு கூட்டத் தொடரில் விவாதம் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

