Last Updated:
நொய்டா செக்டர் 51 முதல் கிரேட்டர் நொய்டா செக்டர் 4 வரை விரைவு மெட்ரோ ரயில் வழித்தட நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நொய்டா மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் நொய்டா செக்டர் 51-லிருந்து கிரேட்டர் நொய்டா செக்டர் 4 வரை 8.449 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஐந்து மேம்பால நிலையங்களுடன் விரைவு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது நொய்டா, கிரேட்டர் நொய்டா நகரங்களில் 71.878 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் கட்டமைப்பு இருக்கும்.
இதுகுறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” நொய்டா மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக நொய்டா செக்டர் 51-லிருந்து கிரேட்டர் நொய்டா செக்டர் 4 வரை விரைவு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பது என்பது நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு சிறந்த முன்னேற்றத்தை குறிப்பிடுகிறது. இத்திட்டம் அந்நகரத்தில் மெட்ரோ ரயில் கட்டமைப்பில் பெரிய விரிவாக்கமாக அமைகிறது.
இது தற்போது உரிய போக்குவரத்து இணைப்பு வசதி இல்லாத நொய்டா, கிரேட்டர் நொய்டா நகரங்களில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதோடு நொய்டா செக்டர் 61 நீல வழித்தடத்தில் உள்ள மாற்று நிலையம் உள்பட அதிக தேவையுடைய வழித்தடங்களுடன் நேரடி இணைப்பையும் ஏற்படுத்தும்.
இது, கிரேட்டர் நொய்டா செக்டர் 4-ல் உள்ள கவுர் சிட்டி மால், எச்எஸ் மால், ப்புளு சஃபையர் மால், நொய்டா செக்டர் 60-ல் உள்ள டெக் மகேந்திரா அலுவலகம், டிசிஎல் தொழில்நுட்ப அலுவலகம், நொய்டா செக்டர் 73-ல் உள்ள என்ஐ தொழில்துறை மேம்பாட்டு வாரியம், நொய்டா செக்டர் 122-ல் உள்ள தில்லி பொதுப் பள்ளி, நொய்டா செக்டர் 70-ல் உள்ள கைலாஷ் மருத்துவமனை, ராமா மருத்துவமனை, நொய்டா செக்டர் 51-ல் உள்ள கிளவ்டு 9 மருத்துவமனை, நொய்டா செக்டர் 62-ல் உள்ள ராமா மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஒருங்கிணைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

